போருக்கு எதிராக ஓவியம் வரைந்த சிறுமியை ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பிய அராஜகம்!
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போருக்கு எதிராக ஓவியம் வரைந்த சிறுமியை, ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போருக்கு எதிரான ஓவியம்
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரைக் குற்றம்சாட்டி ஓவியம் வரைந்ததற்காக 13 வயது சிறுமியை ரஷ்ய அரசு வலுக்கட்டாயமாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பியுள்ளது.
@Twitter/OVD Info
மேலும் அந்த சிறுமியின் தந்தையை வன்முறையைத் தூண்டுவதாக குற்றம்சாட்டி வீட்டுக்காவலில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாசா மொஸ்கலலீவா (Masha Moskaleva) என்ற சிறுமி போருக்கு எதிராக வரைந்த ஓவியத்தில் ஒரு தாய் ரஷ்யா ராணுவம் வீசும் வெடிகுண்டிலிருந்து தனது மகளைக் காப்பது போல் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
உக்ரைனின் வெற்றி
அந்த ஓவியத்தில் உக்ரைன் நாட்டின் தேசிய கொடி வரையப்பட்டிருந்ததோடு “உக்ரைனின் வெற்றி”என்றும்”போர் வேண்டாம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தைப் பார்த்த மாசாவின் ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். அத்தலைமை ஆசிரியர் மாஸ்கோ காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
@Twitter/OVD Info
காவல் துறையினர் பள்ளிக்கு வரச் சிறுமி பயந்து ஓடியுள்ளார். உடனே தனது தந்தையிடம் சென்று “ஓவியம் வரைந்ததற்காக பொலிஸார் என்னை துரத்துகிறார்கள் எனப் பயத்தோடு கூறியுள்ளார்.
@Twitter/OVD Info
புதின் ஒரு மன நோயாளி
காவல்துறை சிறுமியின் தந்தையை வீட்டுக்காவலில் வைத்ததோடு, சிறுமியை ஆதரவற்றோர் இல்லத்திற்குக் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
“புதின் ஒரு மன நோயாளி அதனால் தான் இது போன்ற செயல்களைச் செய்கிறார்” என ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
@getty images
இதுபற்றிய சமூக ஆர்வலர் ஒருவர் “ சிறுமி தற்போது வரை எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை, அவரது தந்தை வீட்டுக்காவலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சிறுமியைக் காண எங்களை அனுமதிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
ரஷ்ய ஊடகம் மற்றும் மனித நேய உரிமை ஆணையம் போருக்கு எதிராக பேசியதற்காக இதுவரை 544 குழந்தைகள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளது.