சூப்பர் மொடலாக மாறி சாதித்த குடிசைப்பகுதி சிறுமி - இணையத்தில் வைரல்
இந்தியாவைச் சேர்ந்த குடிசைப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, மொடலிங் உலகில் நுழைந்து சாதனை படைத்ததன் மூலம் வைரலாகியுள்ளார்.
14 வயது ஏழை சிறுமி
மும்பையின் தாராவியில் உள்ள குடிசைப்பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி மலீஷா கர்வா. இவர் தற்போது மொடலிங் உலகில் நுழைந்ததன் மூலம் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.
குடிசை வீட்டில் தனது தாய், தந்தை மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வந்த சிறுமி மலீஷா, கடந்த 2020ஆம் ஆண்டில் தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டார்.
அதாவது, பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் ஹாப்மேனை அவர் சந்தித்தார். இசை ஆல்பத்திற்காக மும்பை வந்த ஹாப்மேன், கொரோனாவால் விமான சேவை முடங்கியதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவானது.
அச்சமயம் தாராவி குடிசைப் பகுதியில் மலீஷாவின் சரளமான ஆங்கில பேச்சு, துணிச்சல், நடன ஆர்வத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.
பிரபலம்
ஆனாலும் அவரது ஏழ்மை ஹாப்மேனை பாதிக்கவே, இணையதளம் வாயிலாக 15 லட்சம் நிதி திரட்ட முயற்சித்தார். அவரது முயற்சியின் பலனாக 10.77 லட்சம் நிதி திரட்டப்பட்டது.
மேலும், சமூக வலைத்தளங்களில் கணக்குகளை தொடங்கி சிறுமியின் நடன ஆர்வத்தை ஹாப்மேன் ஊக்குவித்தார். இதன் காரணமாக சிறுமி மலீஷா உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.
தற்போது மலீஷா ஆடம்பர அழகு பிராண்ட் ஒன்றின் முகமாக மாறியுள்ளார். சமீபத்தில் The Yuvati Collection மூலமாக மேலும் புகழ்பெற்றுள்ளார்.
குறும்படம்
மொடலிங் உலகில் நுழைந்து பல நிகழ்ச்சிகளைப் பெற்ற சிறுமி, 'Live Your Fairytale' என குறும்படத்திலும் நடித்தார். இதற்கிடையில் Forest Essentials இன்ஸ்டாகிராமில் மனதை கவரும் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
மலீஷா தங்கள் கடைக்குள் நுழைந்த தருணத்தைப் படம்பிடித்து, அவரது பிரச்சாரப் புகைப்படங்களை காட்சிப்படுத்தியது. அப்போது சிறுமியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, அவரது கனவுகள் நனவாகியதைக் காட்டியது.
இந்த வீடியோ விரைவாக வைரலாகி 5.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 413K க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றது.