ஓராண்டு காத்திருப்பு பின்.,இந்திய ஆண்களை திருமணம் செய்த 150 பாகிஸ்தான் பெண்கள்
150 pakistani brides marry indian grooms after a year: இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பாகிஸ்தான் மணப்பெண்கள் ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு இந்தியா வந்துள்ளனர்.
இந்திய ஆண்களை திருமணம் செய்யும் பாகிஸ்தான் பெண்கள்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சிந்தி சமூக குடும்பங்கள், இந்தியாவில் உள்ள தங்களுடைய உறவினர்கள் மற்றும் சிந்தி சமூகத்தினருக்கு தங்களுடைய மகள்களை திருமணம் செய்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
பஹல்காமில் கடந்த 2025ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுத்தனர்.
மேலும் பாகிஸ்தானுடனான அனைத்து தூதரக முயற்சிகளையும் இந்தியா நிறுத்திக் கொண்டது. அத்துடன் பஞ்சாபில் உள்ள வாகா அட்டாரி எல்லை மூடப்பட்டதுடன், பாகிஸ்தானியர்களுக்கான விசாகளையும் இந்தியா முற்றிலுமாக நிறுத்தி வைத்தது.
இதனால் நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே ஆகிய நகரங்களில் உள்ள ஆண்களுடன் திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்ட பெண்கள் இந்தியா வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தியா வந்தடைந்த பாகிஸ்தான் பெண்கள்
மணப்பெண்களின் எதிர்காலம் கேள்விக் குறியான நிலையில், சிந்தி சமூக அமைப்புகள் பாகிஸ்தானின் ஷடானி தர்பார் என்ற சிந்தி புனித அமைப்பான ஆன்மீகத் தலைவர் சாந்த் யதிஷ்டிர்லால் ஷடானியை அணுகி முறையிட்டுள்ளனர்.
இதையடுத்து இந்திய ஆண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களின் விவரப் பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கோரிக்கையை ஏற்றுக் கொண்டது இந்தியா. ஆனால் தரைவழி நுழைவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக வான்வழி நுழைவுக்கு மட்டுமே இந்தியா நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே விமான சேவைகள் முடங்கியுள்ளதால் அவர்களால் நேரடியாக இந்தியா வர முடியாத சூழல் நீடித்தது.
இந்நிலையில் மணப்பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் துபாய், மஸ்கட், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை 150 மணப்பெண்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளனர்.
இன்னும் 300 பெண்கள் வரை இந்தியா வர காத்திருப்பதாகவும் அவர்களுக்கான விசா அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |