19 வயது பிரபலத்திற்கு பிறந்தநாளுக்கு முன் நேர்ந்த சோகம்! நாடு முழுதும் வெடித்த போராட்டம்
சனிக்கிழமை நடந்த மெஹர்ஷாத்தின் இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்
மாஷா அமினியை தொடர்ந்து மெஹர்ஷாத் ஷாஹிதியின் மரணம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
ஈரானில் பிரபல சமையற்கலை நிபுணர் பொலிஸாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக போராட்டம் வெடித்துள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த மாதம், ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி மாஷா அமினி (22) என்ற இளம்பெண், பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாகி பின் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து நாடு முழுவதும் உள்ள பெண்கள் ஹிஜாப் அணிய மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தை அடக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
எனினும் அந்நாட்டில் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த 26ஆம் திகதி சமூக வலைதள பிரபலமான மெஹர்ஷாத் ஷாஹிதி (19) பொலிஸார் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமையற்கலை நிபுணரான மெஹர்ஷாத் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது 20வது பிறந்தநாளை கொண்ட இருந்த நிலையில், ஒருநாள் முன்பு பொலிஸார் காவலில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் தான் அவரை அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தங்கள் மகன் கைது செய்யப்பட்ட பின்னர் தலையில் தடியடி நடத்தப்பட்டதன் விளைவாக உயிரிழந்தார் என்று மெஹர்ஷாத்தின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
ஆனால், ஈரானிய அதிகாரிகள் இதனை மறுத்ததுடன், மெஹர்ஷாத்தின் மரணத்திற்கான காரணம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஈரான் எதிர்ப்பு ஊடகங்களால் வதந்தி பரப்பப்படுவதாகவும், மெஹர்ஷாத்தின் கைகள், கால்கள், மண்டை ஓடு ஆகியவற்றில் எலும்பு முறிவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் மாகாண தலைமை நீதிபதி மற்றும் துணை ஆளுநர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் ஜேமி ஆலிவர் என்று மெஹர்ஷாத் ஷாஹிதி அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.