பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒமைக்ரான் பரவல்!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒமைக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் மாறுபாடு கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது, அதன் பின்னர் உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது.
புதிய மாறுபாடு ‘மிக அதிகமான’ உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை கட்டாயம் என்று பிரான்ஸ் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒருவருக்கு ஒமைக்ரான் மாறுபாடு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக உள்ளூர் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நைஜீரியாவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டதாக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பாரிஸில் பதிவான முதல் ஒமைக்ரான் மாறுபாடு தொற்று இது என்பது குறிப்பிடத்தக்கது.