மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து பிரித்தானியர்களுடன் லண்டன் வந்தடைந்த முதல் விமானம்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல் மற்றும் அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் பதற்றம் உருவாகியுள்ளது.
பிரித்தானியாவைப் பொருத்தவரை, சுமார் 300,000 பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
ஆக, சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள பிரித்தானியர்கள் எப்படியாவது நாடு திரும்பிவிட்டால் போதும் என்னும் பதற்றத்தில் உள்ளார்கள்.
இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றிலிருந்து, முதல் விமானம் பிரித்தானியர்களுடன் லண்டன் வந்தடைந்துள்ளது.
லண்டன் வந்தடைந்த முதல் விமானம்
Etihad Airways என்னும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான விமான நிறுவன விமானம் ஒன்று பிரித்தானியர்களை ஏற்றிக்கொண்டு, நேற்று மாலை 7.00 மணியளவில் லண்டனிலுள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

பிரித்தானியா வந்தடைந்தவர்களை அவர்களுடைய அன்பிற்குரியவர்கள் கட்டியணைத்துக்கொள்ளும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குழப்பத்தை சந்தித்த பிரித்தானியர்கள்
லண்டன் வந்தடைந்த பிரித்தானியர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் தாங்கள் சந்தித்த திகில் அனுபவங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

துபாயில் தன் நண்பர்களுடன் தங்கியிருந்த நடனக்கலைஞரான இசபெல் (Isabel Robertson, 29), சனிக்கிழமை பிரித்தானியாவுக்குப் புறப்பட இருந்த நிலையில், திடீரென தனது விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கவே குழப்பம் அடைந்துள்ளார்.
சிறிது நேரத்தில், பயங்கர வெடிச்சத்தம் கேட்க, அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் அவர். அதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக வெடிச்சத்தம் கேட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து லண்டன் புறப்பட்ட முதல் விமானத்தில் இசபெல்லுக்கு இடம் கிடைக்க, ஹீத்ரோ விமான நிலையம் வந்தடைந்த மகளைக் கண்டு நிம்மதியடைந்த அவரது தாயான ஆல்பா, மகளைக் கட்டியணைத்துக்கொள்கிறார்.
தன் குழந்தை மற்றும் பெற்றோருடன் துபாய்க்கு சுற்றுலா சென்றிருந்த ஏமி (Amy Maguire, 23), திடீரென தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலின் அடித்தளத்திலுள்ள ஒரு சிறிய அறைக்குச் செல்ல தங்களுக்குக் கூறப்பட்டதாகவும், குறிப்பாக தன் குழந்தை தன்னுடன் இருந்ததால் என்ன நடக்குமோ என திகிலடைந்ததாகவும் தெரிவிக்கிறார்.

நேற்று அவரும் பிரித்தானியாவுக்கு புறப்பட்ட விமானத்தில் லண்டன் வந்தடைய, அவரைப்போலவே அந்த விமானத்தில் வந்த பிரித்தானியர்கள் பலரும் இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்கள்.
இதற்கிடையில், இன்னும் ஏராளமான பிரித்தானியர்கள், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் முதல் சவுதி அரேபியா வரையிலான நாடுகளில் சிக்கியிருக்கும் நிலையில், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும் அவரது சக அமைச்சர்களும் அவர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றி பிரித்தானியாவுக்குக் கொண்டுவரும் திட்டங்களை தீட்டிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |