முதல்முறையாக அமெரிக்காவை முந்திய சீனா - இந்தியர்கள் எந்த நாட்டை நம்புகின்றனர்?
பியூ ரிசர்ச்சின் கருத்துக்கணிப்பின்படி, முதல்முறையாக அமெரிக்காவை விட சீனாவை அதிக நாடுகள் சாதகமாக கருதுகின்றன.
அமெரிக்காவை முந்திய சீனா
உலக வல்லரசான அமெரிக்கா தற்போதையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 2வது பதவிக்காலத்தில் வரிவிதிப்பு, ஈரான் மீது தாக்குதல் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பல உலக நாடுகள் அமெரிக்காவை விட சீனாவை நம்ப தொடங்கியுள்ளதாக பியூ ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் தொடங்கிய பிப்ரவரி 8 முதல் மே 13 வரை பியூ ரிசர்ச் நிறுவனம் இந்த கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

20 ஆண்டுகளாக இது குறித்து உலகளாவிய கருத்துக்களைக் கண்காணித்து வரும் இந்த நிறுவனம், முதல் முறையாக அமெரிக்காவை விட சீனாவை உலக நாடுகள் அதிக சாதகமாகப் பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
36 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 25 நாடுகள் அமெரிக்காவை விட சீனாவை சாதகமாக பார்க்கின்றன.
பிரித்தானியா, பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகள் இரு நாடுகளையும் சமமாக கருதுகின்றன.

இந்தியா, இஸ்ரேல், தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய 6 நாடுகள் மட்டுமே சீனாவை விட அமெரிக்காவை சாதகமாக கருதுகின்றன.
3 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவை சாதகமாக கருதும் நாடுகள் 58 சதவிகிதமும், சீனாவை சாதகமாக கருதும் நாடுகள்32 சதவிகிதமும் இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவை சாதகமாக கருதும் நாடுகள் 36 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ட்ரம்ப்பை முந்திய ஷி ஜின்பிங்
அதேவேளையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இருவர் மீதும் நம்பிக்கையில், ஹங்கேரி, பிரேசில், கொலம்பியா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், பிலிப்பைன்ஸ், போலந்து ஆகிய 8 நாடுகள் ட்ரம்ப்பை நம்புகின்றனர்.
தென் கொரியா உள்ளிட்ட 6 நாடுகள் இருவரையும் சமமாக கருதுகின்றன.

ஆனால், பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, ஸ்பெயின் உள்ளிட்ட 22 நாடுகள் ட்ரம்ப்பை விட ஷி ஜின்பிங்கை நம்புகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |