விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிப்பு
இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் 2 கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு 62 பயணிகளுடன் 737- 500 என்ற விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எனவே விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது, இதன்படி தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஜாவா கடலில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டன.
அதேபோல், மனித உடல் பாகங்களும் கண்டுடெடுக்கப்பட்டன. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்பது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து விமானம் விபத்துக்குள்ளான இடமும் கண்டறியப்பட்ட நிலையில், 2 கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கருப்பு பெட்டிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்தோனேஷியா போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.
கருப்பு பெட்டி மீட்கப்படும் பட்சத்தில் அதில் பதிவான விமானிகளின் உரையாடல்களை ஆய்வு செய்தால் விமான விபத்துக்கான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
