வடக்கு காசாவில் இராணுவ சாவடியில் வெடித்த ட்ரோன்: 2 இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் உயிரிழப்பு
2 IDF Reservists Killed in Northern Gaza: வடக்கு காசாவில் நடந்த ட்ரோன் விபத்தில் 2 இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த 2 இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள்
வடக்கு காசாவில் உள்ள இஸ்ரேலிய ராணுவ சாவடிக்கு அருகே இயக்கப்பட்டு வந்த இராணுவ ட்ரோன் எதிர்பாராத விதமாக வெடித்ததில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் 2 ரிசர்வ் வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
2 வீரர்கள் உயிரிழந்ததை வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படை(IDF) வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் உயிரிழந்த வீரர்களின் விவரங்களையும் IDF வெளியிட்டுள்ளது. அதன்படி உயிரிழந்தவர்கள், ஹர் ஹாலுட்ஸ் பகுதியை சேர்ந்த 24 வயது ரிசர்வ் வீரர் மேஜர். நடாவ் காலி மற்றும் ஜெருசலேமை சேர்ந்த 23 வயது ரிசர்வ் வீரர் மேஜர் ஓஃபெக் மோலெம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த இரண்டு வீரர்களும் 16வது பிரிகேட்டின் 7007 வது பட்டாலியன் பிரிவை சேர்ந்தவர்கள்.
இஸ்ரேலிய இராணுவத்தின் முதல் கட்ட விசாரணையில், ட்ரோன் புறப்பட்ட போது இதுவரை கண்டறியப்படாத காரணத்தினால் இராணுவ சாவடியின் எல்லைக்குள் விழுந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சாவடிக்குள் விழுந்த ட்ரோனை வீரர்கள் நெருங்கிய போது திடீரென வெடித்தது. இதில் அந்த வீரர்கள் இரண்டு பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு பின்னர் இந்த காயத்தினால் உயிரிழந்துள்ளனர்.