உலகின் அழகான விமான நிலையங்கள் - பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்
2026 உலகின் அழகான 7 விமான நிலையங்களின் பட்டியலில் 2 இந்திய விமான நிலையங்கள் இடம் பிடித்துள்ளன.
2026 உலகின் அழகான விமான நிலையங்கள்
பிரிக்ஸ் வெர்சாய்ஸ் என்பது கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பிற்கான உலகளவில் புகழ்பெற்ற ஒரு விருதாகும்.
2015 ஆண்டு முதல் சிறந்த விமான நிலையங்கள், அருங்காட்சியகங்கள், ஹொட்டல்கள், உணவகங்கள் ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இதற்கான விருதுகள் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் அழகான 7 விமான நிலையங்கள் பட்டியலில், 2 இந்திய விமான நிலையங்கள் இடம் பிடித்துள்ளது.
முதலிடத்தில், சீனாவின் குவாங்சோவில் உள்ள குவாங்சோ பையுன் சர்வதேச விமான நிலையத்தின் 3வது முனையம் உள்ளது.

ஆர்டெலியா மற்றும் குவாங்டாங் கட்டிடக்கலை வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால் (GDAD) வடிவமைக்கப்பட்டது. இது சீன விமான நிலையங்களிலே, மிக உயரமான திறந்தவெளி கண்காணிப்புத் தளத்தையும் கொண்டுள்ளது.
2வது இடத்தில், ஜேர்மனியின் ஃபிராங்பர்ட் விமான நிலைய 3வது முனையம் உள்ளது.

2 இந்திய விமான நிலையங்கள்
3வது இடத்தில், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாத்தியின் லோகப்பிரியா கோபிநாத் பர்தோலாய் சர்வதேச விமான நிலைய 2வது முனையம் உள்ளது.

கட்டிடக்கலைஞர் நூரு கரீம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த முனையம், அசாமின் நிலப்பரப்புகள் மற்றும் பழங்குடி மரபுகளிலிருந்து உத்வேகம் பெறுகிறது. பாயும் கூரை வடிவங்கள் பிரம்மபுத்திரா நதியைப் பிரதிபலிக்கின்றன.
4வது இடத்தில், இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலைய 1வது முனையம் உள்ளது.

ஜாஹா ஹடிட் ஆர்கிடெக்ட்ஸ் வடிவமைத்த இந்த முனையம், தாமரை மலரிலிருந்து உத்வேகம் பெற்றுள்ளது. தாமரையால் ஈர்க்கப்பட்ட தனித்துவமான தூண்கள், வடிவியல் நுழைவாயில்கள் மற்றும் பரந்த பசுமையான இடங்கள் ஒரு பிரமிக்க வைக்கும் தோற்றத்தை உருவாக்குகின்றன.
5வது இடத்தில், கம்போடியாவின் புனோம் பென்னில் அமைந்துள்ள டெக்கோ சர்வதேச விமான நிலையம் உள்ளது.

6வது இடத்தில், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் உள்ள பிட்ஸ்பர்க் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

7வது இடத்தில், அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள சான் டியாகோ சர்வதேச விமான நிலைய 1வது முனையம் உள்ளது.

இதில் இந்தியாவிலிருந்து இடம்பெற்றிருந்த நவி மும்பை மற்றும் குவஹாத்திஆகிய 2 விமான நிலையங்களையும் அதானி குழுமத்தின் அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் கையாள்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |