பிரித்தானியாவில் சாலை விபத்தில் இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவர் பலி
பிரித்தானியாவில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் மூன்று பெண்கள் கொல்லப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய வம்சாவளிப் பெண்கள் இருவர் பலி
கடந்த சனிக்கிழமை, அதாவது, டிசம்பர் மாதம் 13ஆம் திகதி, நள்ளிரவு 1.00 மணியளவில், இங்கிலாந்திலுள்ள Thrussington மற்றும் Sileby நகரங்களுக்கிடையிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அந்த விபத்தில், Leicesterஇல் வாழ்ந்துவந்த நீரு பட்டேல் (Neeru Patel, 42), பாமினி கார்சன் (Bhamini Karsan, 42) ஆகிய இரண்டு இந்திய வம்சாவளியினரும், மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்கள்.
உயிரிழந்த மூன்றாவது பெண்ணின் குடும்பத்தினர் அவர் குறித்த விவரங்களை வெளியிட விரும்பவில்லை.
அதே காரில் பயணித்த நான்காவது பெண், காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார். அவர் குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.

இந்த விபத்து தொடர்பில், அபாயகரமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக 37 வயதுப் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மூன்று உயிர்களைப் பலிவாங்கிய இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை அறிவதற்காக பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளார்கள்.
தங்கள் காரிலுள்ள கமெராவில் இந்த விபத்து தொடர்பான காட்சிகள் ஏதாவது பதிவாகியிருந்தால், அவற்றைக் கொடுத்து உதவுமாறு அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், ஒரே நாளில் தங்கள் குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் ஒருவரை இழந்ததால் மூன்று குடும்பங்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |