RAF விமானப் படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர்: ஜாமீனில் விடுவிப்பு
2 Latvians Bailed after Breach at RAF Molesworth: பிரித்தானியாவில் RAF விமானப் படை தளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி நுழைந்த இருவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
RAF விமானப் படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்த இருவர்
கேம்பிரிட்ஜ்ஷையர் பகுதியில் உள்ள RAF மோல்ஸ்வொர்த் அரசு விமான படை தளத்தில் கடந்த புதன்கிழமை பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், தளத்தின் சுற்றுச்சுவர் அருகே கைவிடப்பட்ட கார் ஒன்றை கண்டுபிடித்தனர்.
மேலும் சுற்றுச்சுவர் பகுதியில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டு இருப்பதையும் காவல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் விமானப்படை தளத்திற்குள் பதுங்கியிருந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இருவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பிரிவு 4-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பீட்டர்பரோ பகுதியில் உள்ள 2 வீடுகளில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஜாமீனில் விடுதலை
இந்நிலையில் RAF மோல்ஸ்வொர்த் விமானப்படை தளத்திற்கு அத்துமீறி நுழைந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் விசாரணைக்கு பிறகு தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 32 வயது மற்றும் 36 வயதுடைய இருவரும் லாட்வியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.