கடத்தப்பட்ட 2 வணிக கப்பல்கள்: கேள்விக்குறியாகும் 22 இந்தியர்களின் நிலை?
2 merchant ships hijacked off Yemen, Somalia sea 22 Indians in peril : ஏமன் மற்றும் சோமாலியா கடற்கரை பகுதியில் 2 வணிக கப்பல்கள் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளன.
ஏமன் கடற்கரையில் கடத்தப்பட்ட வணிக கப்பல்கள்
ஏமன் கடற்கரைக்கு 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஏடன் வளைகுடாவிற்கு சென்று கொண்டிருந்த “எம்டி ஷிபு 1”(M.T. Sibu 1) என்ற எண்ணெய் வணிக கப்பல் ஆயுதமேந்திய 6 கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.
எரித்திரியா நாட்டு கொடியுடன் பயணித்த இந்த படகில் மொத்தம் 20 பணியாளர்கள் இருந்த நிலையில் அதில் 16 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

வணிக கப்பலானது நேற்று கடத்தப்பட்ட நிலையில், கப்பலின் தற்போதைய நிலை குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால் 16 இந்தியர்களுடன் சேர்த்து மொத்தம் 20 பணியாளர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாக இந்திய கடல்சார் நிர்வாக தலைமை இயக்குநரகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் கடத்தப்பட்ட மற்றொரு கப்பல்
திங்கட்கிழமையன்று சோமாலியாவின் பண்ட்லேன்ட் கடற்கரைக்கு அருகே கேமரூன் கொடியுடன் சென்ற வணிக கப்பலான “எம்வி லுடிப்”(M/V LUTUF) கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் 10 பணியாளர்கள் இருந்த நிலையில் அவர்களில் 6 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.
வணிக கப்பலானது பண்ட்லேண்ட்டில் உள்ள Eyl மாவட்டத்தில் உள்ள மராரையாவுக்கு 3.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டுள்ளது.
சோமாலிய அதிகாரிகளின் தகவல் படி, கடத்தப்பட்ட கப்பல் வடக்கு சோமாலியாவில் Nugaal கடற்கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட போலார் மூவ்மெண்ட் ஷிப்பிங் கப்பலானது சோமாலியாவில் உள்ள துருக்கி ராணுவ பயிற்சி மையத்திற்கான ஆயுதங்கள், பயிற்சி உபகரணங்கள் சேட்டிலைட் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகளை கொண்டு சென்றதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் 8 கடற்கொள்ளையர்கள் இணைந்து இந்த வணிக கப்பலை கடத்தி இருப்பதாகவும், இவர்கள் கடந்த ஏப்ரலில் ஸ்வார்ட் என்ற கப்பலை கடத்தியவர்கள் என்றும் சோமாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |