மரங்கள் அடர்ந்த பகுதியில் நின்றிருந்த கார்... குப்பை சேகரிப்பவர்கள் கண்களில் பட்ட காட்சி: சமயோகித முடிவால் காப்பாற்றப்பட்ட பெண்
அமெரிக்காவில், மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் கார் ஒன்று நிற்பதைக் கண்ட குப்பை அகற்றும் பணியிலிருந்த இருவரின் சமயோகித முடிவால், ஒரு பெண் காப்பாற்றப்பட்டிருக்கிறாள்.
ஞாயிற்றுக்கிழமை மாலை Jalisa Lasalle (10) என்ற சிறுமி காணாமல் போனதையடுத்து, பொலிசார் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
மறுநாள் காலை 7 மணிக்கு, குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த Dion Merrick மற்றும் Brandon Antoine என்னும் இருவர், மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் தனியாக கார் ஒன்று நிற்பதை கவனித்துள்ளார்கள்.
அந்த இடத்தில் தனியாக ஒரு கார் ஏன் நிற்கிறது என்று யோசித்த அவர்களுக்கு, சட்டென முந்தைய நாள் கொடுக்கப்பட்ட ஆம்பர் அலர்ட் ஞாபகம் வந்துள்ளது.
ஆம்பர் அலர்ட்டில் பொலிசார் குறிப்பிட்டிருந்த கார் அதுதான் என்பதைக் கண்டுகொண்ட இருவரும், தங்கள் குப்பை அகற்றும் லொறியை சாலையில் கொண்டு நிறுத்தி, அந்த கார் அங்கிருந்து வெளியேறமுடியாமல் தடுத்துவிட்டு, உடனே பொலிசாரை அழைத்திருக்கிறார்கள்.
விரைந்து வந்த பொலிசார், காரில் Jalisaவைக் கடத்தி வைத்திருந்த Michael Sereal (33) என்பவனைக் கைது செய்துள்ளார்கள்.
அவன் ஏற்கனவே ஒரு பாலியல் குற்றவாளியாக பொலிசாரால் அறியப்பட்டிருந்தவன் என்று தெரியவந்தபோது, அதிர்ச்சியடைந்த Dion Merrick அதே நேரத்தில், தான் ஒரு குழந்தையை காப்பாற்றிவிட்டதை எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.
நான் ஒரு பெண் குழந்தையை காப்பாற்றிவிட்டேன், கடவுளுக்கு நன்றி என்று கூறும் Dion Merrick, எனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் என்கிறார்.
பொலிசார் Michaelஐ கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியை Dion Merrick தனது மொபைலில் வீடியோ எடுத்திருக்கிறார்.
Dion Merrick மற்றும் Brandon Antoine இருவரையும் பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளார்கள். அத்துடன் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திலுள்ள சக ஊழியர்களும் அவர்களை பாராட்டு மழையில் நனைக்க, நாங்கள் எங்கள் கடமையைத்தான் செய்தோம் என்கிறார்கள் இருவரும் மிகவும் பணிவாக!


