உக்ரைனில் ஹீரோவாக போற்றப்படும் 2 வயது நாய்!
உக்ரைனில் ரஷ்ய வெடிமருந்துகளை மோப்பம் பிடித்து இறைஅன்புவ வீரர்களுக்கு பெரும் உதவியாய் இருந்துவரும் 2 வயது நாய் ஹீரோவாக போற்றப்படுகிறது.
உக்ரைன் போர் வீரத்தின் கதைகள் நிறைந்தது. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் ரஷ்ய வீரர்களை முன்னேற விடாமல் உள்ளூர் மக்களைக் காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன.
அவற்றுள் இரண்டு வயதுடைய 'பேட்ரான்' (Patron) என்ற ஜாக் ரஸ்ஸல் டெரியர் (Jack Russell Terrier) நாய் உக்ரைனைச் சுற்றிலும் ஆபத்தான வெடிமருந்துகளை மோப்பம் பிடித்து ஹீரோவாகியுள்ளது.
உக்ரைனின் ஸ்டேட் எமர்ஜென்சி சர்வீஸ் ஆஃப் உக்ரைன் (SES) 'Patron' வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்டது, அந்த நாய் இதுவரை 90 வெடிபொருட்களை கண்டுபிடித்து கொடுத்துள்ளது என்று கூறியுள்ளது.
பல நூற்றாண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள மோதல் மண்டலங்களில் பல்வேறு கடமைகளைச் செய்ய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்த வகையில், இப்போது Patron எனும் அந்த நாய் உக்ரைனில் உள்ள எண்ணற்ற ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.
ஜாக் ரஸ்ஸல் டெரியர் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவில் நரிகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு நாய் இனமாகும். இது பார்சன் ரஸ்ஸல் டெரியர் என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது ஒரு சுதந்திரமான, உற்சாகமான மற்றும் புத்திசாலி நாய் இனமாகும், இது பயிற்சி மற்றும் நிர்வகிக்க எளிதானது. இந்த குட்டி நாய்க்குட்டியின் ஆற்றல் மற்றும் தீவிரம் உக்ரேனிய பாதுகாப்பு படைகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
மிகக் குறுகிய காலத்தில், 'Patron' சமூக ஊடகங்களிலும் பிரபலமாகியுள்ளது. உக்ரைனிய வீரர்களை ஹீரோக்களாக போற்றிவரும் சமூக வலைதள பயனர்கள் அந்த நாயையும் ஹீரோவாக போற்றுகின்றனர்.



