நாட்டையே பரபரப்பாக்கிய சிறை கலவரம்.. கொத்தாக சிக்கிய கைதிகள்!
ஈக்குவடாரில் நடந்த சிறை கலவரத்தில் தப்பியோடிய 200 கைதிகளை பிடித்துள்ளதாக அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சாண்டோ டொமிங்கோ நகர சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த கலவரத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை பயன்படுத்தி 220 கைதிகள் சிறையில் இருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கலவரத்தில் இறந்தவர்களில் 41 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், தப்பியோடியவர்களில் 200 பேரை பிடித்துவிட்டதாகவும், மீதமுள்ள 20 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை நடவடிக்கைகளின் தலைவர் Geovanny Ponce தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'தப்பியோடிய மீதமுள்ள 20 பேர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 3,000 டொலர்களை அரசாங்கம் வழங்கும். அதன் மூலம் அவர்களை விரைவில் பிடிப்போம்' என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கலவரம் நடந்ததை அறிந்து கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு முன்பு குவிந்தனர். இறந்தவர்கள் மற்றும் தப்பியோடிவர்களின் விபரம் குறித்து கேட்டவாறு அவர்கள் காத்திருக்கின்றனர்.
உலகின் மிகப்பெரிய கோகோயின் உற்பத்தியாளர்களான கொலம்பியாவிற்கும், பெருவிற்கும் இடையில் அமைந்துள்ள ஈக்வடாரில், போட்டி போதை மருந்து குழுக்களுக்கு இடையேயான சண்டையின் காரணமாக இந்த வன்முறை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் Liz Throssell கூறுகையில், 'இந்த கவலை அளிக்கும் சம்பவங்கள் மற்றும் நாட்டில் நீடித்து வரும் நெருக்கடியை சமாளிக்க சிறைச்சாலை அமைப்பு உட்பட, குற்றவியல் நீதி முறையில் விரிவான சீர்திருத்தத்தின் அவசர தேவையை மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன தனது காவலில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பிற்கும் அரசு தான் பொறுப்பு. இந்த சம்பவங்கள் குறித்த முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
மேலும், மனித உரிமைகளுக்கான சர்வதேச அமெரிக்கன் அமைப்பு இந்த கலவரத்தை கண்டித்துள்ளதுடன், தீவிரமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என ஈக்குவடார் அரசை வலியுறுத்தியுள்ளது.
ஈக்குவடாரில் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன மற்றும் காவலர்கள் குறைவாக உள்ளனர். மேலும் கைதிகள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட அனைத்து வகையான ஆயுதங்களையும் வைத்துக் கொண்டுள்ளனர் என்றும், இதற்கு பரவலான ஊழல் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.