2007யில் டி20 உலகக்கிண்ணத்தை வென்ற இந்திய சாம்பியன்கள்.,இப்போது என்ன செய்கிறார்கள்?
முதல் முறையாக டி20 உலகக் கிண்ணத்தை 2007யில் வென்ற இந்திய அணியில் விளையாடியவர்கள், இப்போது என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போமா.
2007ஆம் ஆண்டு இந்திய அணி
எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட்டது.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா, 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றி சாம்பியன் ஆனது.
அப்போட்டியில் கௌதம் காம்பீர் 75 (54) ஓட்டங்களும், ரோஹித் ஷர்மா 16 பந்துகளில் 30 ஓட்டங்களும் விளாசினர். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆர்.பி.சிங் மற்றும் இர்பான் பதான் தலா 3 விக்கெட்டுகளும், ஜோஹிந்தர் ஷர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அந்த தொடரில் ஒவ்வொரு போட்டியில் இந்திய வீரர்களில் ஒவ்வொருவரும் ஹீரோவாக இருந்தனர். குறிப்பாக யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டது சரித்திரமானது.
அணித்தலைவர் எம்.எஸ்.தோனி
2007யில் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
2020யில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
கௌதம் காம்பீர்
இறுதிப் போட்டியில் 75 ஓட்டங்கள் விளாசிய கவுதம் காம்பீர் அரசியலில் களமிறங்கினார்.
பின்னர் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் வந்த அவர், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.
யுவராஜ் சிங்
சிக்ஸர் மன்னனாக வலம் வந்த யுவராஜ் சிங், புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து லெஜெண்ட்ஸ் தொடரில் கலக்கினார்.
இப்போது அவர் டி20 உலகக் கிண்ணத் தூதராக உள்ளார். இது உலகளவில் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.
ஹர்பஜன் சிங்
2007 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங், 2021ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் அரசியலில் இணைந்ததுடன் தொடர்ந்து வர்ணனை செய்து வருகிறார். இதற்கிடையில் தமிழில் திரைப்படம் ஒன்றிலும் நடித்தார்.
ரோஹித் ஷர்மா
தற்போது பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும், தோனிக்கு பின் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியவருமான ரோஹித் ஷர்மா 2007யில்தான் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்தார். இதன்மூலம் இருமுறை உலகக்கிண்ணத்தை வென்ற அணியில் விளையாடிய ஒரே வீரர் ஆனார்.
இர்பான் பதான்
2007 இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற இர்பான் பதான், அதன் பின்னர் விரைவில் ஓய்வு பெற்றார்.
எனினும் பிரபலமான கிரிக்கெட் வர்ணனையாளராக அவர் மாறினார். மேலும் லெஜெண்ட்ஸ் லீக் வீரராகவும் மிரட்டி வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |