வெளியானது நோபல் பரிசுகள் அறிவிப்பு திகதி - இதுவரை நோபல் பரிசு வென்ற தமிழர்கள்
நோபல் பரிசுகள் அறிவிக்கும் திகதி பட்டியல் வெளியாகியுள்ளது.
நோபல் பரிசு
உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் அறக்கட்டளையால் இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கபடுகிறது.
நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 11 மில்லியன் ஸ்வீடிஸ் கிரௌன்ஸ் (இந்திய மதிப்பில் ரூ10.41 கோடி) ஆகியவை வழங்கப்பட உள்ளது.
அறிவிப்பு பட்டியல்
நாளை முதல் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர் வெளியாக உள்ளது. இதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.
மருத்துவத்திற்கான நோபல் பரிசு - 6 அக்டோபர்
இயற்பியலுக்கான நோபல் பரிசு - 7 அக்டோபர்
வேதியியலுக்கான நோபல் பரிசு - 8 அக்டோபர்
இலக்கியத்துக்கான நோபல் பரிசு - 9 அக்டோபர்
அமைதிக்கான நோபல் பரிசு - 10 அக்டோபர்
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு - 13 அக்டோபர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் பல்வேறு போர்களை நிறுத்தியுள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருவதால் அமைதிக்கான நோபல் பரிசு மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுவரை தமிழர்கள் 3 பேர் நோபல் பரிசை வென்றுள்ளனர்.
சி.வி.ராமன்
தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த சர்.சி.வி.ராமன் 1930 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
ஒளி ஒரு பொருளின் ஊடக செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்த ராமன் விளைவுக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
சுப்பிரமணியன் சந்திரசேகர்
இன்றைய பாகிஸ்தானின் லாகூரில் பிறந்த தமிழ் குடும்பத்தை சேர்ந்த சுப்பிரமணியன் சந்திரசேகர் என்பவருக்கு 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வில்லியம் ஃபௌலருடன் இணைந்து இந்த விருதை பெற்றார். விண்மீன்கள் பற்றிய ஆய்வு காரணமாக இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தை பூர்விகமாக கொண்ட வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு 2009 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் அடா யோனட்ஸ் ஆகியோருடன் இணைந்து இந்த விருதை பெற்றார்.
அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |