மொடலிங்கில் சாதிக்க விரும்பிய இளம்பெண்.. சுட்டுக்கொன்ற சகோதரர்.. அதிகரிக்கும் ஆணவக்கொலைகள்!
பாகிஸ்தானில் மொடலிங் துறையில் இருந்து விலக மறுத்த இளம்பெண்ணை அவரது சகோதரர் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய கலாச்சாரத்தை பெண்கள் பின்பற்றுவது பாகிஸ்தானின் பெரும்பாலான இடங்களில் தவறாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆணவக்கொலைகளும் அரங்கேறி வருகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் பைசலாபாத்தில் ஆயிஷா என்ற 19 வயது பெண் நடனமாடிக் கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரெனாலா குர்ட் ஒகாரா பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (21). மொடலிங் துறையில் சாதிக்க விரும்பிய இவர் மொடலாகவும், நடனக்கலைஞராகவும் இருந்தார். ஆனால் அவரது குடும்பத்தினருக்கு இதில் உடன்பாடு இல்லை. இந்த துறை நம் குடும்ப பாரம்பரியத்திற்கு எதிரானது என்றும், இதில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் சித்ராவை வலியுறுத்தினார். எனினும் அதை ஏற்காத சித்ரா தொடர்ந்து மொடலிங்கில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் பொது இடத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை பார்த்த உறவினர் ஒருவர், சித்ராவின் சகோதரர் ஹம்சாவுக்கு செல்போனில் அனுப்பியுள்ளார். அதனைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ஹம்சா, உடனே வீட்டிற்கு சென்று சித்ராவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மொடலிங்கை கைவிட வேண்டும் என்று அவர் கூறியதை சித்ரா ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹம்சா துப்பாக்கியை எடுத்து சித்ராவை சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் ஹம்சாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.