தன்னை யாரோ கொல்ல வருவதாக கற்பனை செய்த 23 வயது இளைஞன்! பின் வீட்டில் பெற்றோருடன் இருந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் பெற்றோர் உள்ளிட்ட மூவரை கத்தியால் குத்திய வாலிபர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெயதாஸ் (71), இவருடைய மனைவி சாலினி. இவர்களுக்கு ஜெகன்(29), ஜேக்கப்(23) என 2 மகன்கள் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயதாஸ் வீட்டில் இருந்து அலறும் சத்தம் கேட்டது. உடனே, அக்கம் பக்கத்தினர் ஜெயதாஸ் வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
அப்போது ஜேக்கப் மிகவும் ஆவேசமான நிலையில் மாடியில் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் மேலிருந்து கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜெயதாஸ், அவரது மனைவி சாலினி மற்றும் ஜெகன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர்.
உடனே பொலிசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
ஜேக்கப் கடந்த சில நாட்களாக திடீரென கோபப்படுவது, தன்னை யாரோ கொல்ல வருவதாக சத்தம் போடுவது என முரண்பட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த ஜேக்கப், பெற்றோரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இதனை அவரது அண்ணன் ஜெகன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜேக்கப், அண்ணன் என்றும் பாராமல் ஜெகனை கத்தியால் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த தந்தை ஜெயதாஸ், தாயார் சாலினி ஆகியோரையும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர்களது முகம் மற்றும் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கினர். உடனே, ஜேக்கப் வீட்டின் மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.