உக்ரைனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்பை உறுதி செய்துள்ள 26 நாடுகள்
ரஷ்யாவுடனான எந்தவொரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கும் பிறகு உக்ரைனின் பாதுகாப்பிற்கு பங்களிக்க 26 நாடுகள் முன்வந்துள்ளதாக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
26 நாடுகள் உறுதி
உக்ரைன் தொடர்பில் பாரிஸ் நகரில் நடந்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு பின்னர் மேக்ரான் இதை தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்காவின் ஆதரவு எதிர்வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனும் காணொளி ஊடாக விவாதித்துள்ளனர். தற்போது 26 நாடுகள் உறுதி அளித்துள்ளதாகவும், சில நாடுகள் தங்கள் நிலையை உறுதி செய்யவில்லை என்றும், உக்ரைனில் படைகளை களமிறக்க இந்த 26 நாடுகளும் தயார் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தப் படைகள் ரஷ்யா மீது எந்தப் போரையும் முன்னெடுக்காது என்றும், உக்ரைனுக்கான பாதுகாப்பை மட்டுமே உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கி நன்றி
இந்தப் பாதுகாப்பு முயற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பில் எவ்வித சந்தேகமும் வேண்டாம் என்றும், அடுத்த சில நாட்களில் இறுதி செய்யபப்டும் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிறகு உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப ஒப்புக்கொண்ட ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
இந்த நகர்வு உறுதியான முதல் நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் புதிய தடைகளை விதிக்கும் என்றும் பிரெஞ்சு ஜனாதிபதி கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |