லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு கத்திக்குத்து: 7 பேரை கைது செய்த பொலிஸார்
லண்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளி இளைஞருக்கு கத்திக்குத்து
மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 26 வயது குர்பேஜ் சிங் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை லண்டன் பெருநகர காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை நார்த் ரோடு மற்றும் டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்பு பகுதியில் நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அங்கு இரண்டு பேர் காயங்களுடன் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இருவருக்கும் உடனடியாக தீவிர மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், 26 வயது குர்பேஜ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 20 முதல் 30 வயதுடைய 7 பேர் கொலை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பிறகு 7 பேரில் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |