95% சொத்தை நன்கொடையாக வழங்க உள்ள உலகின் 2வது பணக்காரர்
உலகின் 2வது பணக்காரரான லாரி எலிசன், தனது சொத்தில் 95% நன்கொடையாக வழங்க உள்ளார்.
லாரி எலிசன்
81 வயதான லாரி எலிசன், ஆரக்கிள்(Oracle) நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவர் தற்போது, 368 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
இவர் தனது ஆரக்கிள் நிறுவனத்தில் 41 சதவீத பங்குகளை வைத்துள்ளார். மேலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார்.
இவர் தனது சொத்தில் 95 சதவீதத்தை நன்கொடையாக வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
2010 ஆம் ஆண்டிலே Giving Pledge திட்டம் மூலம், தனது சொத்தில் 95 சதவீதத்தை நன்கொடையாக வழங்க போவதாக அறிவித்தார்.
ஆனால் மற்ற பணக்காரர்கள் போல், பாரம்பரிய தொண்டு நிறுவனங்களுக்கு வழங்காமல், லாரி எலிசன் வேறு பாதையை தேர்வு செய்தார்.
95% சொத்தை நன்கொடை வழங்க திட்டம்
இதற்காக, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை தளமாக கொண்டு எலிசன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(EIT) என்னும் லாப நோக்கற்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இந்த நிறுவனம், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, உணவு பாதுகாப்பின்மை, காலநிலை மாற்றம், சுகாதார பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்துகிறது.
EIT, 2027 ஆம் ஆண்டில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், 1.3 பில்லியன் டொலர் மதிப்பிலான பெரிய வளாகத்தை திறக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், பல ஆண்டுகளாக லாரி எலிசன், பல்வேறு பாரிய நன்கொடைகளை வழங்கி வருகிறார்.
முன்னதாக, தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் நிறுவுவதற்காக 200 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கினார். அதைத்தொடர்ந்து, எலிசன் மருத்துவ அறக்கட்டளைக்கு 1 பில்லியன் டொலர் வழங்கினார்.
ஆனால், அவரது EIT அமைப்பு தற்போது சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டில், EITல் ஆராய்ச்சியை வழிநடத்த ஜான் பெல் என்பவரை நியமித்தார். தற்போது, அவர் இந்த திட்டம் சவாலானது எனக்கூறி விலகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |