டேங்கர் லொறியில் மோதிய கார்... விபத்து என நினைத்த பொலிசார்: தெரியவந்த திடுக் தகவல்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நின்றுகொண்டிருந்த டேங்கர் லொறி மீது கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்தார்கள்.
அது ஒரு வழக்கமான விபத்து என பொலிசார் நினைத்தார்கள். ஆனால், அது ஒரு கடத்தல் சம்பவம் என்பது பின்னர் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
டேங்கர் லொறியில் மோதிய கார்...
ஞாயிற்றுக்கிழமை மாலை, உத்தரப்பிரதேசத்திலுள்ள தண்டா சிக்கந்தர்பூர் என்னுமிடத்தில் மணிக்கு 150 மைல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, நின்றுகொண்டிருந்த டேங்கர் லொறி ஒன்றின் மீது மோதியதில் காரில் பயணித்த மன்மோகன் சிங் (30), சிக்கந்தர் மற்றும் சிஷேஷ் ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

அதே நேரத்தில் அந்த காரிலிருந்த, முறையே 3 மற்றும் 6 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தூக்கி வீசப்பட்டார்கள். அவர்கள் தூக்கி வீசப்பட்டதில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும், அவர்கள் இருவரும் உயிர் பிழைத்துவிட்டார்கள்.
அத்துடன், அந்தக் காரின் சாரதியும் படுகாயமடைந்தார். அவரும் அந்த சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
தெரியவந்த உண்மை
இது ஒரு வழக்கமான விபத்து என பொலிசார் நினைத்துக்கொண்டிருக்க, உயிர் பிழைத்த சிறுவர்களில், அந்த ஆறு வயது சிறுவன், தங்களை மன்மோகன் கடத்திச் சென்றதாக கூற, வழக்கு சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
அத்துடன், காரின் சாரதியும் சில தகவல்களை அளிக்க உண்மை வெளியானது.
இதற்கிடையில், தன் கணவரான மனோஜும் தன் இரண்டு பிள்ளைகளும் கடத்தப்பட்டதாக அந்தப் பிள்ளைகளின் தாய் பொலிசில் புகாரளித்துள்ளார்.
மனோஜும் அவரது பிள்ளைகளும் கடத்தப்பட்டதற்கு ஆதாரமாக, உயிரிழந்தவர்களில் ஒருவரது மொபைலிலிருந்து சில வீடியோக்களும் கிடைத்துள்ளன.
அதைத் தொடர்ந்து மனோஜை தேடிச் சென்ற பொலிசார், அவரை மன்மோகனின் தந்தையான நாது ஓரிடத்தில் அடைத்துவைத்திருப்பது தெரியவரவே, அவரை மீட்டதுடன், நாதுவையும் கைது செய்துள்ளார்கள்.
பின்னணி
அதாவது, மனோஜும் மன்மோகனும் உறவினர்கள். மனோஜின் உறவினரான பெண்ணொருவரை திருமணம் செய்துகொடுக்குமாறு மன்மோகன் மனோஜிடம் கேட்டுள்ளார்.
அவர் மறுக்கவே, அவரையும் அவரது பிள்ளைகளையும் தன் நண்பர்கள் உதவியுடன் மன்மோகன் கடத்திச் செல்லும்போது விபத்தில் சிக்க, மன்மோகனும் அவரது நண்பர்களும் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
அதிரவைத்துள்ள இந்த வழக்கு தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |