படகில் பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோர் மாயம்! நடுக்கடலில் மீட்கப்பட்டவர்கள் அளித்த பகீர் தகவல்
ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் மாயமானதை ஆங்கில கால்வாய் மற்றும் வட கடலின் கடல்சார் Prefecture அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
Prefecture வெளியிட்ட அறிக்கையில், வியாழனன்று கலேஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இரண்டு படகுகளில் இருந்த இருவரை பிரான்ஸ் கடற்படையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட படகில் மேலும் மூன்று பேர் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் மீட்கப்பட்ட இருவர் பிரான்ஸ் கடற்படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரான்ஸ் கடற்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிக்கு பல துறையினர் முடக்கிவிடப்பட்ட போதிலும், 3 நபர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அன்று தேடுதல் இடைநிறுத்தப்பட்டது என்று Prefecture வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் கடற்படையினர் புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடத்தப்பட்ட பல தனித்தனி நடவடிக்கைகளில் ஆங்கிலக் கால்வாயின் நீரில் 50க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.