வெள்ளை மாளிகைக்குள் நுழைய 3 செய்தி ஊடகங்களுக்கு தடை: டிரம்புக்கு எதிராக வழக்கு
3 News Outlets Sue Trump After White House Ban: வெள்ளை மாளிகைக்குள் நுழைய 3 செய்தி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஊடக நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர உள்ளனர்.
வெள்ளை மாளிகைக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை
அமெரிக்காவின் பிரபலமான 3 செய்தி ஊடங்களான CNN, MS NOW, மற்றும் Politico ஆகியவை வெள்ளை மாளிகைக்குள் நுழைய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
போலி செய்தி நிறுவனங்கள் என முத்திரை குத்தி டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த தடை நடவடிக்கையை எதிர்த்து மூன்று செய்தி நிறுவனங்களும் டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்கள் X தளத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில், தங்களது வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
மேலும் அதில், எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் வெள்ளை மாளிகை தங்களது செய்தியாளர்களை தடை செய்துள்ளது.
ஏனென்றால் நாங்கள் வெளியிட்ட செய்திகளை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள இந்த தடையை எதிர்க்காவிட்டால் பத்திரிகை சுதந்திரம் மற்றும் அரசாங்க தலையீடு இல்லாத தன்னிச்சையான பத்திரிகைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் 3 செய்தி ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு அமெரிக்காவில் பல்வேறு தொலைக்காட்சி அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவு
இதற்கிடையில் 3 ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், இந்த நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல, தவறான, போலி மற்றும் திசைதிருப்பும் செய்திகளை பரப்பும் நிறுவனங்களுக்கு எதிரானது மட்டுமே என்று விளக்கியுள்ளார்.
இது நம்முடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய ஒன்று என்றும், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.