3 செயற்கைகோள்களை தயாரித்து தமிழர் சாதனை! யார் இவர்?
இந்திய மாநிலம் ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிங்கப்பூர் சார்பில், பி.எஸ்.எல்.வி., சி 56 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 3 செயற்கைக்கோள்களை தமிழகத்தைச் சேர்ந்த சண்முக சுந்தரம் என்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
யார் இந்த சண்முக சுந்தரம்?
விஞ்ஞானியான சண்முக சுந்தரம் தமிழகத்தில் உள்ள அரியலூர் மாவட்ட நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு வயது 30. இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தார்.
பின்பு, தனது கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார்.
சிறுவயது முதலே இவருக்கு செயற்கைகோள்கள் மாற்று விண்வெளி ஆராய்ச்சி மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது.
தற்போது இவர், சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் செயற்கைக்கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி சாதனை
சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் போதே சிறிய மற்றும் பெரிய வகை செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு குழு தலைவராக சண்முக சுந்தரம் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சிங்கப்பூர் சார்பில், பி.எஸ்.எல்.வி., சி 56 ராக்கெட் மூலம் ஆர்கேட், ஸ்கூப் 2, வேலோக்ஸ் -ஏ.எம், டி.எஸ் ஆர், நியூலயன், கலாசியா, ஆர்ப்-12 ஸ்டிரைடர் ஆகிய 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இதில், ஆர்கேட், ஸ்கூப் 2, வேலோக்ஸ் -ஏ.எம் ஆகிய 3 செயற்கைகோள்களுக்கும் திட்ட மேலாளர், வடிவமைப்பாளர், பொறியாளராக சண்முக சுந்தரம் இருந்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக சண்முக சுந்தரம் கூறுகையில்," விண்ணுக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் பலரது கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது. இது போல பல செயற்கைக்கோள்களை உருவாக்குவோம் என நம்புகிறோம். எனது ஆராய்ச்சியை முடித்த பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் வாயிலாக கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடுவேன்" எனக் கூறினார்.
சாலை வசதி இல்லாத சிறிய கிராமத்தில் பிறந்த சண்முக சுந்தரம் 3 செயற்கைக்கோள்களை உருவாக்கி இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |