கடற்கரையில் மூன்று இளம்பெண்கள் சடலமாக மீட்கப்பட்ட விடயம்: அதிர்ச்சி தகவல்
Sisters pulled from sea near Brighton took own lives, coroner rules: இங்கிலாந்தில், கடற்கரையில் மூன்று இளம்பெண்கள் சடலமாக மீட்கப்பட்ட விடயத்தில், அவர்கள் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்திலுள்ள பிரைட்டன் நகருக்கு அருகில், கடற்கரை ஒன்றில் மூன்று சகோதரிகள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த மூன்று பேரும் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மூன்று சகோதரிகள்
மே மாதம் 13ஆம் திகதி, அதிகாலை 5.45 மணிக்கு பிரைட்டன் நகருக்கு அருகில், கடற்கரை ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.

அதைத் தொடர்ந்து, ஜேன் (Jane Adetoro, 36), கிறிஸ்டினா (Christina Walters, 32) மற்றும் ரெபேக்கா (Rebecca Walters, 31) என்னும் மூன்று பெண்களின் உடல்கள் தண்ணீரிலிருந்து உயிரற்ற நிலையில் மீட்கப்பட்டன.
விசாரணை அதிகாரியின் முடிவு
மூன்று சகோதரிகள் ஒரே இடத்தில் உயிரிழந்த விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், அவர்கள் எதனால் உயிரிழந்தார்கள் என்பது குறித்து நீதிமன்ற விசாரணை அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டுவந்தார்.
இந்நிலையில், அவர் தனது விசாரணையின் முடிவுகளை பிரைட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதாவது, சகோதரிகள் மூவரும் உயிரிழப்பதற்கு முன், தங்கள் தாய் கடைசியாக வாழ்ந்த இடத்துக்குச் சென்றுள்ளார்கள். அவரும் கடலில் மூழ்கித்தான் உயிரிழந்துள்ளார்.
பின்னர், 12ஆம் திகதி இரவு 10.21 மணியளவில் பிரைட்டனிலுள்ள அந்த கடல் பகுதிக்குச் சென்றுள்ளார்கள் அவர்கள்.

கடைசியாக அவர்களுடைய நடமாட்டம் சிசிடிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது, 13ஆம் திகதி அதிகாலை 2.42 மணிக்கு.
அதன்பின், அவர்கள் உயிரற்ற நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சகோதரிகளில் ஒருவர், இணையத்தில், உயிரை மாய்த்துக்கொள்வது எப்படி என்பது குறித்து தேடியுள்ளார்.
அதிகாலை இருட்டோடே கடலில் இறங்கிய சகோதரிகள், தங்களுக்கு நீச்சல் தெரியாது என்பது நன்கு தெரிந்திருந்தும், கடலில் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதைக் கவனித்தும் கடலில் இறங்கியுள்ளார்கள்.
ஆக, அவர்கள் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொண்டதாகவும், தண்ணீரில் மூழ்கியதால் அவர்கள் உயிர் பிரிந்ததாகவும் நீதிமன்ற விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.