1.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 3 மெல்போர்ன் கோப்பைகள் திருட்டு: அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை
3 Stolen Melbourne Cup Trophies stolen : 1.5 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான மதிப்புள்ள 3 மெல்போர்ன் கோப்பைகள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருடப்பட்ட 3 மெல்போர்ன் கோப்பைகள்
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் 1.5 மில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான மதிப்புள்ள 3 மெல்போர்ன் கோப்பைகள் திருடப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோப்பைகள் திருடப்பட்டதை அடுத்து, அதனை மீட்க அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு எப்சம் சாலையில் உள்ள பிளெமிங்டன் குதிரைப்பந்தய மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்காக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தலா 510,000 பவுண்ட் மதிப்புள்ள மூன்று தங்கக் கோப்பைகளையும் அவர்கள் கண்ணாடியை உடைத்து திருடியுள்ளனர்.
திருடப்பட்ட கோப்பைகளானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கைது செய்த பொலிஸார்
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மென்போர்னின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சோதனையிட்ட பொலிஸார் 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இருப்பினும் திருடப்பட்ட கோப்பைகள் இன்னும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.