போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு - பாகிஸ்தானில் 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வரும் ஜூலை 27 ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போட்டியிட உள்ள 45 இடங்களில் 12 இடங்கள் காஷ்மீர் அகதிகளுக்கு ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து ஜேஏஏசி (JAAC) அமைப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
சில நாட்களுக்கு முன்னர் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கருதி பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இந்த அமைப்பை தடை செய்துள்ளது.

இந்த தடைக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்தன. கடந்த 5 ஆம் திகதி பாதுகாப்பு படையினருடனான மோதலில் வணிகர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து, அவரின் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு ஜேஏஏசி அமைப்பின் ஆதரவாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் கூட்டத்தை கலைக்க முயன்ற போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. போராட்ட குழுவினர் தானியங்கி துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து ரவலக்கோட்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, கலவரம் ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் இணையம் மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் போராட்டம்
பாதுகாப்பு படையினரை கண்டித்து, பிரித்தானியாவின் பிராட்போர்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே காஷ்மீர் புலம்பெயர்ந்தோரின் போராட்டங்கள் தீவிரமடைந்தன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பூர்வீகமாகக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிராட்போர்டு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான இம்ரான் ஹுசைன் தலைமையில் 50 பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த விவகாரத்தில் இராஜதந்திர ரீதியாகத் தலையிடுமாறு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தினர்.
As Chair of the APPG on Kashmir, our letter to the Foreign Secretary now has the support of over 50 Parliamentarians.
— Imran Hussain MP (@Imran_HussainMP) June 8, 2026
We remain deeply concerned by reports of a continued lockdown, a communications blackout, arrests and escalating tensions.
The UK Government must use all… pic.twitter.com/djhXkBPuoS
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடிதத்தை "பொறுப்பற்றது" மற்றும் "தவறான தகவல்களின் அடிப்படையில் அமைந்தது" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தோடு, இதில் தலையிட வேண்டாம் என கடுமையாக விமர்சித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |