மின்சார கார் தொழிற்சாலையை விரிவுபடுத்த 1,000 ஏக்கர் காடுகளை அழித்த எலோன் மஸ்க்
ஜேர்மனியில் டெஸ்லா நிறுவனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றை விரிவுபடுத்தும் வகையில் சுமார் 500,000 மரங்களை வெட்டி நீக்கியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
813 ஏக்கர் காடுகள்
ஜேர்மன் தொழிற்சாலையின் அந்த கட்டிடமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் எதிர்ப்புகளையும் ஈர்த்தது. மட்டுமின்றி, நாட்டில் பசுமைப் பொருளாதாரத்தை வளர்ப்பதாக கூறி முன்னெடுக்கப்பட்டுள்ள வர்த்தக பரிமாற்றங்கள் பற்றிய விவாதத்தையும் தூண்டியுள்ளது.
ஆனால் தமது தொழிற்சாலைக்கு எதிராக தீவிர இடதுசாரிகளின் போராட்டங்களுக்கு அனுமதி அளித்ததாக கூறி எலோன் மஸ்க் உள்ளூர் பொலிஸ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கசிந்துள்ள தரவுகளின் அடிப்படையில், கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2023 மே மாதம் வரையில் 813 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று தெரிவிக்கையில், 813 ஏக்கர் என்பது, தோராயமாக 500,000 மரங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மே மாதத்தில் இருந்தே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஒரு குழுவினர் மின்கம்பத்திற்கு தீ வைத்து ஆலையின் உற்பத்தியை சில நாட்களுக்கு நிறுத்தினர்.
ஆண்டுக்கு 1 மில்லியன் கார்கள்
மட்டுமின்றி, ஜேர்மனியின் மிக வரண்ட பகுதியில், மிக மோசமான அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை டெஸ்லா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்றே ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், டெஸ்லா தொழிற்சாலையில் விரிவாக்கம், காடுகளின் அழிவு மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் பகுதிக்கு ஆபத்து ஏற்படுவது உள்ளிட்டவை உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்றும் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே டெஸ்லா தொழிற்சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்டுள்ள மரங்கள் சுமார் 13,000 டன் CO2 க்கு சமம் என சுற்றுச்சூழல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் டெஸ்லா தொழிற்சாலை விரிவாக்கத்திற்கும், ஆண்டுக்கு 1 மில்லியன் கார்கள் என உற்பத்தியை இருமடங்காக்கவும் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.
தற்போது ஏற்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் டெஸ்லா நிர்வாகம் இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |