திருமணமான 43 நாட்களில் 19 வயது மனைவியை கொடூரமாக கொன்ற 33 வயதான கணவன்! காரணம் என்ன? தமிழகத்தில் பகீர் சம்பவம்
தமிழகத்தில் திருமணமான 43 நாட்களில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (33). கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கும் மோனிஷா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மோனிஷாவின் கழுத்தை பிடித்து சரமாரியாக அறுத்துள்ளார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்ததும் பொலிசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்று பயந்த தங்கராஜ் வீட்டை பூட்டிக்கொண்டு அங்கு இருந்த கேபிள் வயரை எடுத்து கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை 9 மணி ஆன பிறகும் தங்கராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது புதுப்பெண் மோனிஷா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதும் தெரியவந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்றுவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
