ஈராக்கில் 3,400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!
ஈராக்கில் வறட்சியின் காரணமாக நீர்த்தேக்கம் வற்றியதால் 3,400 ஆண்டுகள் பழமையான பண்டைய நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குர்திஸ்தான் பகுதியில் உள்ள கெமுனே பகுதியில் சுமார் 3,400 ஆண்டுகள் பழமையான ஈராக் நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெண்கலக் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் குடியேற்றம், டைக்ரிஸ் ஆற்றின் ஒரு குறிப்பிட்ட பகுதி வறண்ட பிறகு கண்டுபிடிக்கப்பட்டது, அணை மீண்டும் நிரம்புவதற்கு முன்பு நகரத்தைத் தோண்ட திட்டமிடப்பட்டுள்ளது.
கிமு 1550 முதல் கிமு 1350 வரை மிட்டானி பேரரசின் ஆட்சியின் போது இந்த பண்டைய நகரம் ஒரு முக்கிய மையமாக இருந்ததாக ஜேர்மன் மற்றும் குர்திஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள ஃப்ரீபர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் குழு வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் இவானா புல்ஜிஸ், “இந்த நகரம் டைக்ரிஸில் நேரடியாக அமைந்திருப்பதால், மிட்டானி பேரரசின் முக்கிய பகுதியை இணைப்பதில் இது முக்கிய பங்கு வகித்திருக்கலாம். இது இன்றைய வடகிழக்கு சிரியாவிலும், பேரரசின் கிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
ஆனால், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அகழாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பெரும் நீரால் முக்கியமான தளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க, அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கட்டிடங்கள் முழுவதுமாக இறுக்கமான பொருத்தப்பட்ட பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்டு, ஜல்லிக்கற்களால் மூடப்பட்டன. தளம் இப்போது மீண்டும் முழுமையாக மூழ்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளது.