ரஷ்ய போரால் உக்ரைனில் பலியான மக்களின் எண்ணிக்கையை வெளியிட்டது ஐ.நா!
ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைனில் இதுவரை பலியான பொதுமக்களின் எண்ணிக்கையை ஐ.நா கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை ஐ.நா கண்காணிப்பு குழு வெளியிட்ட தகவலின் படி, ரஷ்ய படையெடுக்க தொடங்கிய பிப்ரவரி 24ம் திகதி முதல் தற்போது வரை உக்ரைனில் பொதுமக்கள் 350-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளது.
உண்மையான எண்ணிக்கைகள் கணிசமான அளவு அதிகமாக இருக்கும் என உக்ரைனில் நிலைமையை கண்காணித்து வரும் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் மற்றும் குறிப்பாக சமீபத்திய நாட்களில், தீவிர தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் சில இடங்களில் இருந்து தகவல் பெறுவது தாமதமானது மற்றும் பல அறிக்கைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன.
Volnovakha நகரில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என OHCHR தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு தாக்குதல், ராக்கெட் தாக்குதல், ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல்களால் பெரும்பாலான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக OHCHR குறிப்பிட்டுள்ளது.