நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயற்சித்த 37 பேர் உயிரிழப்பு
37 dies while illegal petroleum siphoning in neigeria: நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயற்சித்த 37 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட்டு
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் எண்ணெய் வளம் மிக்க நைஜர் டெல்டா பகுதியில், கச்சா எண்ணெய் குழாய்களில் சட்டவிரோதமாக இணைப்புகளை ஏற்படுத்தி எண்ணெய் திருடுவது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவில் ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள ஓக்ரிகா படகுத் துறையில், ஏற்றுமதிக்காக ஒரு கப்பல் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்துள்ளது.
அப்போது சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரப் படகுகளில் வந்து, அந்த ஆலையுடன் இணைக்கப்பட்ட குழாய்களில் சட்டவிரோதமாக ஒரு குழாயை இணைத்து பெட்ரோலியப் பொருட்களை உறிஞ்சி எடுக்க முயற்சித்துள்ளனர்.
பெட்ரோலியப் பொருளைத் தங்கள் படகுகளில் ஏற்றும்போது, அதிலிருந்து வடிந்த அபாயகரமான புகையை சுவாசித்ததன் விளைவாக பலர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எண்ணெய் திருட்டினால் ஆண்டுதோறும் பல பில்லியன் டொலர்கள் இழப்புகள் ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ள நைஜீரிய அரசாங்கம் இதனை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி நைஜீரிய கடற்படை நடத்திய ஒரு நடவடிக்கையின்போது, ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள 2 சட்டவிரோத சுத்திகரிப்பு நிலையங்களை அகற்றி, சட்டவிரோதமாக சுத்திகரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 34,000 லிட்டர் வாகன எரிவாயுவை கைப்பற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |