ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை
ஈரானில் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் உதவியுடன் இணைய சேவையை வழங்கிய நபரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இணைய சேவை முடக்கம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் உடனான போர் மோதல் தொடங்கியதில் இருந்து ஈரான் முழுவதும் இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளி உலகத்துடனான ஈரானிய மக்களின் தொடர்பை துண்டிக்கும் வகையில் இந்த இணைய சேவை தடையானது கொண்டு வரப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் இணைய சேவை இன்றி தவித்து வரும் நிலையில், சிலர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தடையை மீறி வருகின்றனர்.

37 வயது இளைஞர் கைது
அந்த வகையில், ஈரானின் ஷிராஸ் நகரில் 37 வயது இளைஞர் ஒருவர், ஈரான் அரசின் டிஜிட்டல் தடையை மீறி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக இணைய சேவை முனையங்களை விநியோகித்து வந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பார்ஸ் மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இந்த இணைய சேவை நெட்வொர்க் ஆனது அரசின் தடைகளை மீறி செயல்பட்டு வந்தாக ஈரானின் அரசு ஊடகமான ISNA வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஈரானிய சட்டப்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 37 வயது இளைஞர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |