பிரான்ஸ் கலவரம் தொடர்பாக 3,700 பேர் கைது: 700 பேருக்கு சிறை
பிரான்ஸ் கலவரம் தொடர்பாக 3,700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 700 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17 வயது இளைஞரை சுட்டுக்கொன்ற பொலிசார்
ஜூன் மாதம் 27ஆம் திகதி, பிரான்சிலுள்ள Nanterre என்னுமிடத்தில், போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரு காரை பொலிசார் நிறுத்தச் சொல்லியதாகவும், அந்தக் காரின் சாரதி காரை நிறுத்தாமல் சென்றதாகவும் கூறி, பொலிசார் அந்தக் காரை ஓட்டிய Nahel (17) என்னும் இளைஞரை சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவம் பிரான்சில் வன்முறைக்கு வழிவகுக்க, Nahelக்கு ஆதரவாக தெருக்களில் இறங்கிய போராட்டக்காரர்கள் கடைகளை சேதப்படுத்துவது, தீவைப்பு போன்ற செயல்களில் இறங்க, பல்லாயிரக்கணக்கான பொலிசார் நாடெங்கும் குவிக்கப்பட்டனர்.
3,700 பேர் கைது, 700 பேருக்கு சிறை
நேற்று முன்தினம் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விவரித்த பிரான்ஸ் நீதித்துறை அமைச்சரான Eric Dupond-Moretti, பிரான்ஸ் கலவரங்கள் தொடர்பாக 3,700க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 1,278 பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய சராசரி வயது 17 மட்டுமே. அவர்களில் 700 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வயது வராதோர் சிறுவர்களுக்கான நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 95 சதவிகிதத்தினர் மீதும் சூறையாடல் முதல் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியது வரையிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |