சரமாரியாக சுட்ட துப்பாக்கிதாரி... சிதறி ஓடிய மக்கள்: இரத்தவெள்ளத்தில் உடல்கள்
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு மையம் ஒன்றில் துப்பாக்கிதாரி சரமாரியாக சுட்டத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இல்லினாய்ஸ் மாகாணத்தின் ராக்ஃபோர்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள விளையாட்டு மையம் ஒன்றில் திடீரென்று புகுந்த நபர், தம்மிடம் இருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூன்று இளைஞர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், துரிதமாக செயல்பட்டு துப்பாக்கிதாரியை கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், ஒரே ஒருவர் மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இந்த தாக்குதலில் எவ்வித நோக்கமும் அந்த நபருக்கு இல்லை என்றே கூறப்படுகிறது.
காயமடைந்துள்ள இளைஞர்களை அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது விளையாட்டு மையத்தின் உள்ளே இருந்த இளைஞர்கள் பலர் சிதறி ஓடியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடந்த விளையாட்டு மையமானது 1959 ம் ஆண்டில் இருந்தே அதே பகுதியில் செயல்பட்டு வருகிறது.
விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதால், பொதுமக்களுக்கு அப்பகுதியில் இருந்து விலகிச்செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.