10 நாட்களில் மூன்றாவது முறை... அமெரிக்காவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட இந்தியர்கள்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக நாடு கடத்தப்பட்ட 112 இந்தியர்களுடன் விமானம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரஸில் தரையிறங்கியது.
33 பேர் குஜராத்திலிருந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புலம்பெயர்ந்தோர் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, 10 நாட்களில் மூன்றாவது முறையாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 31 பேர் பஞ்சாபிலிருந்தும், 44 பேர் ஹரியானாவிலிருந்தும், 33 பேர் குஜராத்திலிருந்தும், இரண்டு பேர் உத்தரப் பிரதேசத்திலிருந்தும், தலா ஒருவர் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்டிலிருந்தும் வந்துள்ளனர்.
பின்னணி சோதனைகள் உள்ளிட்ட அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்த பிறகு நாடுகடத்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பிப்ரவரி 5 ஆம் திகதி முதல் சுற்று நாடுகடத்தல் முன்னெடுக்கப்பட்டது, அமெரிக்க இராணுவ விமானம் ஒன்றில் 104 இந்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர்.
அப்போதும் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது. பஞ்சாப் மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அமிர்தசரஸ் நகரில் தரையிறக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ட்ரம்புக்கு உறுதி
ஆனால் மூன்றாவது முறையாக திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 44 பேர் ஹரியானாவிலிருந்தும், 33 பேர் குஜராத்திலிருந்தும் வந்துள்ளனர். இருப்பினும் பஞ்சாப் மாகாணத்தில் விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்று நாடுகடத்தலின் போது, இந்தியர்கள் விலங்கிடப்பட்டு விமான பயணம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. குறித்த விவகாரம் அரசியல் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் தங்களது குடிமக்களை இந்தியா திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி ட்ரம்புக்கு உறுதி அளித்திருந்தார்.
மெக்சிகோ மற்றும் எல் சால்வடாருக்குப் பிறகு அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகளின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |