உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 49 பேர் உயிருடன் மீட்பு.., மாயமான 5 பேர் பேரை தேடும் பணி தீவிரம்
உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் மாயமாகியுள்ளனர்.
5 பேர் மாயம்
இந்திய மாநிலமான உத்தரகாண்ட், சமோலி மாவட்டத்தில் உள்ள மணா என்ற கிராமத்தில் நேற்று காலை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் 57 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.
மணா கிராமமானது இந்தியா- திபெத் எல்லையில் உள்ளது. பத்ரிநாத் தாமில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களின் மீது பனிப்பாறைகள் சறுக்கி விழுந்து விபத்து நேர்ந்துள்ளது.
பின்னர், விபத்து நடைபெற்ற இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புக்குழு, தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட நிர்வாகம், இந்தோ-திபெத் எல்லை பொலிஸ் விரைந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தின.
இதில், நேற்று இரவு வரை 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பின்னர் தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்றதால் இன்று 17 பேர் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்தில், பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவர்கள் ராணுவ முகாமிற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், படுகாயத்துடன் இருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது 49 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதால் மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |