ராஜராஜ சோழன் முதல் சூரிய கடவுள் வரை…பிரமிப்பூட்டும் இந்தியாவின் 5 பழமையான கோயில்கள்!
ஆழமான வரலாற்றையும், பல தரப்பட்ட கலாச்சாரங்களையும் கொண்ட உலகின் தனித்துவமான நாடாக இந்தியா விளங்குகிறது.
இப்படிப்பட்ட இந்தியாவில் ஆச்சரியமூட்டும் கட்டிட கலைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களில் தொடங்கி ஒரே பாறையில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கலைப்படைப்புகள் வரை காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இவ்வாறு காண்போரை மெய் சிலிர்க்க வைக்க கூடிய இந்தியாவின் இந்த 5 தலைசிறந்த கோயில்கள் உங்களை ஆச்சரியத்தில் நிச்சயம் ஆழ்த்தும்.
இந்தியாவின் 5 பழமையான கோயில்கள்
கைலாசநாதர் கோயில் (Kailasa Temple)
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லோரா குகைகளில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் இந்திய கலைப்படையின் உச்சம் ஆகும்.
இந்த கைலாசநாதர் கோயில் முழுவதும் ஒற்றை மலையை மேலிருந்து கீழாக செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது.
8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் இந்து புராண கதைகளை விளக்கும் அற்புதமான கலை படைப்புகளுடன் கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி?
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்(Meenakshi Temple)
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில், 14 உயரமான கோபுரங்களுடன் பிரமிப்பூட்டுகிறது.
இந்த கோவிலில் முதன்மை தெய்வங்களாக மீனாட்சி அம்பாளும், சுந்தரேஸ்வரரும் மக்களுக்கு அருள் புரிகின்றனர்.
இந்த கோயில் அமைந்துள்ள கூரை ஓவியங்களும், வண்ணமயமான கலை சிற்பங்களும் தெய்வலோகத்தை நினைவூட்டுவதாக அமைக்கிறது.
மேலும் இந்த கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் இந்திய கட்டிடக்கலையின் தனிச்சிறப்பாக விளங்குகிறது.
பிரகதீஸ்வரர் கோயில்(Brihadeeswarar Temple)
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயில் திராவிட கட்டிடக்கலையின் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழ் மன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளை கடந்தும் இன்னும் தலைநிமிர்ந்து நிற்கிறது.
இந்த கோயிலின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள 80 டன் எடையுள்ள ஒரே கல்லை எவ்வாறு 1000 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலின் உச்சிக்கு கொண்டு சென்றார்கள் என்பது இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது.
மேலும், 66 மீட்டர் உயரமுள்ள கிரானைட் கற்களால் செதுக்கப்பட்ட கோயிலின் விமானம் கூடுதல் சிறப்பாகும்.
கோனார்க் சூரியன் கோவில்(Konark Sun Temple)
ஓடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த கோனார்க் சூரியன் கோயில், 13ம் நூற்றாண்டில் சூரிய கடவுளுக்காக தேர் வடிவில் எழுப்பப்பட்ட பிரம்மாண்ட படைப்பாகும்.
இந்த கோவிலின் தனிச்சிறப்பாக மிகவும் கலைநயத்துடன் செதுக்கப்பட்ட 24 சக்கரங்கள் உள்ளன.
சூரிய கடிகாரங்களாக செயல்படும் இந்த சக்கரங்கள் பண்டைய கால இந்திய பொறியியல் வல்லுநர்களின் அறிவுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
கோயிலின் சில பகுதி சேதமடைந்து இருந்தாலும், இதன் பிரம்மாண்டம் இன்னும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கு வியப்பூட்டும் ஒன்றாக திகழ்கிறது.
விருபாக்ஷா கோயில்(Virupaksha Temple)
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள விருபாக்ஷா கோயில், பல்வேறு படையெடுப்புகளை தாண்டியும், ஹம்பியின் இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னும் நிமிர்ந்து நிற்கும் தலைசிறந்த கட்டிடக்கலையாகும்.
சிவபெருமானுக்காக எழுப்பட்ட இந்த கோயில் கடந்த 7ம் நூற்றாண்டு முதல் வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது.
இந்த கோவிலின் சிறப்புகளாக அதன் தூண் மண்டபம், அழகிய பிரமாண்ட கோபுரம் மற்றும் சுவர்களில் தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல் ஆகியவை அமைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |