காபூல் விமான நிலையத்தில் பாய்ந்த 5 ராக்கெட்டுகள்! அமெரிக்கா வெளியிட்ட ஆதிகாரப்பூரவ அறிக்கை
காபூல் விமான நிலையத்தை நோக்கி ஐந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவற்றை தங்களது வான்பாதுகாப்புத் தளவாடம் மூலம் இடைமறித்து அழித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கூட்டுப் படை தலைமையக செய்தித் தொடா்பாளா் வில்லியம் அா்பன் கூறியதாவது. காபூல் விமான நிலையத்தை நோக்கி திங்கள்கிழமை ஐந்து ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.
அதையடுத்து, விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் சி-ராம் (C-RAM) வான்பாதுகாப்புத் தளவாடம் இயக்கப்பட்டது. அந்தத் தளவாடம் பீரங்கி குண்டுகள், ராக்கெட் குண்டுகளை சரமாரியாக ஏவி தாக்குதல் நடத்த வந்த ராக்கெட் குண்டுகளை இடைமறித்து அழித்தது.
இந்தச் சம்பவத்துக்கிடையிலும், காபூல் விமான நிலையம் வழியாக அமெரிக்கா்களையும் அமெரிக்காவுக்கு உதவியா்களையும் ஆப்கானிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணியை அமெரிக்க வீரா்கள் தொடா்ந்து மேற்கொண்டனா் என்றாா் அவா்.
இதற்கிடையே, காபூல் விமான நிலையத்துக்கு வரும் அமெரிக்கா்கள் திருப்பி அனுப்பப்படுவதாக வெளியான தகவலை ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரி ராஸ் வில்சன் மறுத்துள்ளாா்.
இதுகுறித்து ட்விட்டா் வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஆப்கானிஸ்தானிலிருந்து உரியவா்களை வெளியேற்றுவது மிகவும் ஆபத்து நிறைந்த பணி. இந்தச் சூழலில், காபூல் சா்வதேச விமான நிலையத்துக்கு வரும் அமெரிக்கா்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானதாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் நடப்படக்கூடும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், அந்த விமான நிலையத்தில் தாக்குதல் நடத்துவதற்காக வெடிபொருள் நிரப்பிய வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட காப்பாளர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது