1 மணி நேரத்திற்கு 5 பேர்கள்: நெருக்கமானவர்கள் கொலை செய்யப்படும் பெண்கள்: ஐ.நா அறிக்கை
5 women killed every hour by family, un finds: உலக அளவில் நெருக்கமானவர்களால் பெண்கள் படுகொலை செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட 47,000 பெண்கள்
கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 47,000-க்கும் மேற்பட்ட பெண்களும் சிறுமிகளும் தங்களது கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு 129 பெண்கள் வீதம், சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 பெண்கள் தங்களுக்கு மிக நெருக்கமானவர்களாலேயே கொல்லப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஐ.நா. மகளிர் அமைப்பும் (UN Women) போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா. அலுவலகமும் (UNODC) இணைந்து செவ்வாய்க்கிழமை இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டன.
122 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே குடும்ப வன்முறையால் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையாமல், ஆண்டுக்கு 45,000 முதல் 51,000 என்ற அளவிலேயே நீடிக்கிறது.
குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்கள்
கடந்த ஆண்டு உலகளவில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட 78,000 பெண்கள் மற்றும் சிறுமிகளில், 60 சதவீதம் பேர் தங்களது வீட்டிற்குள்ளேயே உயிரிழந்துள்ளனர்.
உலகளாவிய ஒட்டுமொத்த கொலைச் சம்பவங்களில் பெண்களின் எண்ணிக்கை 19 சதவீதம் மட்டுமே. ஆனால், ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்குத் தங்களது வீடே பாதுகாப்பற்ற இடமாக உள்ளது.
கொலை செய்யப்பட்ட ஆண்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே குடும்பத்தினர் அல்லது துணைவர்களால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.