500000 சட்டவிரோத குடியேறிகளுக்கு நாடு கடத்தல் உத்தரவு! டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 5 லட்சம் பேரின் தற்காலிக அனுமதியை திரும்பப் பெற அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் 5 லட்சம் பேர்
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு அவரவர் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
அந்த வகையில், 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட தற்காலிக சட்ட பாதுகாப்பை திரும்ப பெற இருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.
இதனால், அவர்கள் ஒரு மாதத்திற்குள் நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரி விளக்கம்
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிஸ்டி நோயம் கூறுகையில், "கடந்த 2022 முதல் கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்த 5,32,000 பேருக்கு வாபஸ் பெறும் உத்தரவு பொருந்தும்.
இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்கள் ஏப்ரல் 24-ம் திகதி அல்லது பெடரல் பதிவாளர் நோட்டீஸ் வெளியான 30 நாட்களுக்குப் பிறகு தங்கள் சட்டப் பாதுகாப்பை இழப்பார்கள்" என்றார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்ப் உறுதி அளித்தார்.
தற்போது ஜனாதிபதியாக அவர் இதனை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும், புலம்பெயரும் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வந்து தங்குவதற்கான சட்டப்பூர்வ வழிகளையும் அவர் அடைத்து வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |