ட்ரக் கவிழ்ந்து 54 புலம்பெயர்வோர் உயிரிழப்பு... சாலையோரம் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள உடல்கள்: ஒரு துயர செய்தி
அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டிருந்த ட்ரக் ஒன்று கவிழ்ந்ததில், அதில் பயணித்த புலம்பெயர்வோர் சுமார் 54 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
மெக்சிகோவிலிருந்து கண்டெய்னர் டரக் ஒன்றில் சுமார் 200 புலம்பெயர்வோர் அமெரிக்கா நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது அந்த ட்ரக் வேகமாக சென்றதாலும், அந்த கண்டெய்னரில் ஏராளமானோர் இருந்ததால் அதன் கனம் காரணமாகவும் அது வளைவு ஒன்றில் கவிழ்ந்துள்ளது.
கவிழ்ந்த வேகத்தில் அருகிலிருந்த இரும்பு பாலம் ஒன்றின் மீது அது மோத, கண்டெய்னர் சிதற, ட்ரக்கிலிருந்தவர்கள் தூக்கி வீசப்பட, 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்கள், 54 பேர் காயமடைந்துள்ளார்கள், அவர்களில் 21 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
மெக்சிகோவிலுள்ள Chiapas மாகாணத்திலுள்ள Tuxtla Gutierrez என்ற நகரில், உயிரிழந்தவர்களின் உடல்கள் வரிசையாக சாலையோரமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துயரக் காட்சியை வெளியாகியுள்ள புகைப்படங்களில் காணலாம்.
உயிரிழந்தவர்கள், மத்திய அமெரிக்க நாட்டவர்கள், சிலர் குவாதிமாலாவையும், சிலர் ஹோண்டூராஸையும் சேர்ந்தவர்கள் என கருதப்படுகிறது.
வாழ்வு வரும் என நம்பி அமெரிக்கா நோக்கி புறப்பட்ட அந்த புலம்பெயர்வோர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.