ரூ.5 கோடி மோசடி வழக்கு: பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ரூ.5 கோடி மோசடி வழக்கில் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவினரால் (EOW) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.5 கோடி மோசடி வழக்கு
₹1000 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி, பலரிடம் இருந்து சுமார் ₹5 கோடி வரை மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2013-ல் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த பவர்ஸ்டார் சீனிவாசன், அதன் பிறகு விக்ரமின் 'ஐ' உட்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த இவர், அக்குபஞ்சர் மருத்துவரும் ஆவார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது முதல் முறையல்ல
சீனிவாசனுக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2013-ம் ஆண்டு இதே போன்ற மோசடி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், 2018 டிசம்பரில் இவர் கடத்தப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியது.
டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அளித்த தகவலின்படி, சீனிவாசன் இரண்டு முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் என்றும், 2018-ம் ஆண்டு முதல் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து தலைமறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், அவர் திரைப்படத் தயாரிப்பு மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிதி ஆதாரங்களை மோசடியாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அத்துடன், சென்னையில் மேலும் ஆறு மோசடி வழக்குகளில் அவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுடன் அவருக்குத் தொடர்பு இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |