மதபோதகர் பால் தினகரன் வீட்டில் இருந்து 5 கிலோ தங்கம் பறிமுதல்! கணக்கில் வராத பல கோடிகள் கண்டுபிடிப்பு... வருமான வரித்துறையினர் அதிரடி
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில், மத பிரசார கூட்டங்களை நடத்தி வருபவர் பால் தினகரன். இவருக்கு, வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு, முறையாக வரி செலுத்தவில்லை என, வருமான வரித் துறைக்கு புகார் வந்தது.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக் கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும் புகார்கள் வந்தன.
இந்த புகார்களின் படி, சென்னை, கோவை உட்பட, பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், வருமான வரித் துறையினர் மூன்று நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தற்போது கனடாவில் இருக்கும் பால் தினகரன் மற்றும் குடும்பத்தாரையும் விசாரணைக்கு சென்னைக்கு அழைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இயேசு அழைக்கிறார் அமைப்பில், நேற்று மூன்றாவது நாளாக சோதனை தொடர்ந்தது.
மூன்றாவது நாளும் வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக, குழும அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது என கூறியுள்ளனர்.
இதனிடையி பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை காருண்யா பல்கலை கழக வளாகத்தில் உள்ள வீட்டிலிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
இதோடு ரூ 120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடும் கண்டறியப்பட்டுள்ளது.
