மேயர் அறிவிப்பு வெளியான சில மணிநேரத்திற்குள் நடந்த அடுத்தடுத்த தாக்குதல்கள்: பீதியில் மக்கள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பொது போக்குவரத்து பாதைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான புதிய உத்தரவை மேயர் பிறப்பித்த சிறிது நேரத்திற்குள் நகரின் சுரங்கப்பாதைகளில் அடுத்தடுத்து நடந்த 6 தாக்குதல் சம்பவங்களால் மக்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் சுரங்கப்பாதைகளில் அதிகரித்து வரும் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் நோக்கில், நகரின் பொது போக்குவரத்து பாதைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பான 17 பக்க புதிய திட்டம் ஒன்றை அந்த நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் மற்றும் கவர்னர் கேத்தி ஹாசில் ஆகிய இருவரும் இணைந்து வெளிட்டு இருந்தனர்.
இந்த அறிவிப்பு வெளிவந்த 24 மணிநேரத்திற்குள் 5 பேர் நகரின் சுரங்கப்பாதை பகுதிகளில் குத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதுவரை 6 நபர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், அதில் முதல் நபர் கடந்த சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தாக்கப்பட்டதாகவும், கடைசி மற்றும் 6வது நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6Line பகுதிக்கு அருகில் உள்ள கேணல் தெருவில் தாக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று முதல் (திங்கள்கிழமை) நகரின் அனைத்து சுரங்க பாதைகளிலும் அதிக போலீசார் மற்றும் மனநல குழுக்கள் குவிக்கப்பட்டு சுரங்கப்பாதை பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் பொது போக்குவரத்து குற்றங்கள் அதிகரித்து வரும் சுழலில், நகரின் இந்த ஆண்டு குற்றங்கள் 65 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.