இந்த போரை பலத்தால் மட்டுமே நிறுத்த முடியும்! வான் பாதுகாப்பு கோரி ஜெலென்ஸ்கி கோரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீது இரவுநேர தாக்குதல்
போர் தொடங்கியதிலிருந்து உக்ரைன் மீது நடத்தப்பட்ட மிக தீவிரமான வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை ரஷ்யா ஒரே இரவில் ஏவி உள்ளது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் 600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் நாட்டை குறிவைத்து தாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
X தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தாக்குதலின் அளவை ஜெலன்ஸ்கி விரிவாக தெரிவித்துள்ளார். அதில உக்ரைனிய விமானப்படை 26 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் வியக்க வைக்கும் வகையில் 597 தாக்குதல் ட்ரோன்களைக் கண்காணித்ததாக உறுதிப்படுத்தினார்.
பெரும்பாலான ட்ரோன்களும் 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டாலும், இந்தத் தாக்குதலின் பெரும் எண்ணிக்கை மோதலின் இடைவிடாத தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜெலென்ஸ்கி வேண்டுகோள்
இந்த விரிவான தாக்குதலைத் தொடர்ந்து, ஜெலன்ஸ்கி சர்வதேச நட்பு நாடுகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்து, இராணுவ உதவிகளை அதிகரிக்கக் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த அதிக வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குமாறும், உக்ரைனின் சொந்த இடைமறிக்கும் ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யுமாறும் அவர் குறிப்பாக வலியுறுத்தியுள்ளார்.
"இந்த யுத்தத்தை பலத்தால் மட்டுமே நிறுத்த முடியும்," என்று ஜெலன்ஸ்கி உறுதிபடக் தெரிவித்துள்ளார். உறுதியான ஆதரவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, "எங்கள் பங்காளர்களிடமிருந்து வெறும் சமிக்ஞைகளை மட்டுமல்ல, உயிர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |