பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் வீசிய துர்நாற்றம்: 13 மணி நேரம் சமையலறையில் சடலம்
ஹொங்கொங்கில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர்
ஹொங்கொங்கில் இருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பயணித்தது.

அந்த விமானம் புறப்பட்ட அரை மணிநேரத்திலேயே 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் முதலில் குழப்பமடைந்த விமானிகள், விமானத்தை திருப்பாமல் பயணத்தை தொடர முடிவு செய்துள்ளனர்.
பின்னர் 13 அரை மணிநேர பயணமாக விமானம் பறந்தது. ஆனால்,சக பயணிகள் விமானத்திற்குள் துர்நாற்றம் வீசியதாக புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண்ணின் சடலத்தை தனிமைப்படுத்தி, துணிகளால் சுற்றி, பின்புறத்தில் உள்ள வெப்பமான சமையலறையில் வைக்கப்பட்டது.
சமையலறையில் சடலம்
சுமார் 13 மணிநேரம் அப்பெண்ணின் சடலம் அந்த அறையில் வைத்தே கொண்டுசெல்லப்பட்டது. 'அந்த சமையலறையில் சூடேற்றப்பட்ட தரை இருந்தது, அதை சில விமானப் பணியாளர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர். மேலும் விமானப் பயணத்தின் முடிவில் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதாகக்' கூறப்பட்டது.
லண்டனில் விமானம் தரையிறங்கியபோது காவல்துறை அதற்காக காத்திருந்தது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானப் பணியாளர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும், அவர்களில் சிலர் மன அதிர்ச்சியில் பணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், விமானத்தில் இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் தாங்கள் ஆதரவளிப்பதாகக் கூறினார்.
இந்த நிலையில் விமான நிறுவனம் கூறுகையில், "ஒரு வாடிக்கையாளர் விமானத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன. நாங்கள் எங்கள் விமானப் பணியாளர்களுக்கு ஆதரவளிக்கிறோம், மேலும் அனைத்து நடைமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |